தமது வழக்குகளை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திலிருந்து மீளவும் வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி கடந்த 27 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
“உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே!”, “அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்தில் இருந்து வவுனியாவுக்கு மாற்று!”, “அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பில் விடுதலை செய்!” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, புதிய ஜனநாயக
மாக்சிச லெனினசக் கட்சியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் வடபிராந்திய செயலாளர் தோழர் செல்வம் கதிர்காமநாதன் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“வாழ்வின் விளிம்பில், தமது கோரிக்கைகளை வெளிப்படுத்த வேறு வழிகள் எதுவுமற்ற நிலையில், தமது உயிரைப் பணயம் வைத்து, அரசியல் கைதிகளாக இருக்கின்ற எமது உறவுகள் 27 நாட்களையும் கடந்து போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில், நாம் இவர்களுடைய கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்பதற்காகக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு வகையான போராட்டங்களையும் ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து முன்னெடுத்து வந்துள்ளோம். ஆனாலும், அரசு இதுவரை இப் பிரச்சினைக்குச் சரியானதொரு பதிலைச் சொல்லாமல், ஏனைய மக்கள் போராட்டங்களில் நடந்துகொள்வதுபோல் இழுத்தடிப்புகளை மேற்கொண்டு வருகின்றமை மிகவும் மனவருத்தத்திற்கு உரியது.
எனவே, இனியும் இத்தகைய இழுத்தடிப்பைத் தொடர்வதன் மூலம் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிரோடு விளையாடாமல் விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி எம்மால் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதில் அனைவரையும் அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.