அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கினால் அது நாம் பயங்கரவாதத்திற்கு அடிபணிவதாக அமைந்துவிடும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தலைநகர் பாடசாலைகளில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் பம்பலபிட்டி இந்து கல்லூரியின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். எந்தவொரு மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடமுடியாது.
மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டால், அது இலங்கை பொருளாதாரத்துக்கு பாரிய பின்னடைவாக அமைந்துவிடும்.
மாணவர்கள் பாடசாலைக்கு சென்றால் மட்டுமே அனைவருக்கும் புதிய நம்பிக்கை ஏற்படும். பொலிஸ், இராணுவத்தினர் அனைவரும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே, நாம் எமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். எமது ஆட்சி காலத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தால், நாட்டின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்தியிருப்போம்.
மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவந்திருப்போம். அதனை செய்யாது வீதியில் இறங்க அஞ்சி வீட்டுக்குள் முடங்கினால் நாம் பயங்கரவாதத்துக்கு அடிபணிவதாக அமைந்துவிடும்.
மக்கள் அச்சமின்றி வெளியில் வரவேண்டும். அதனை உறுதிபடுத்தவே எதிர்க்கட்சி இந்த கள விஜயத்தை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி- பிரதமருக்கும் அறிவித்துள்ளோம்.
இதுதொடர்பிலான ஒத்துழைப்புக்களை வழங்க நாம் தயாராகவே இருக்கிறோம். நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக நாம் திருப்தியடைகிறோம்” எனத் தெரிவித்தார்.