சபாநாயகர் மீது தி.மு.க கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம், குரல் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து எண்ணிக் கணிக்கும் முறையில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை, ரகசிய வாக்கெடுப்பாக நடத்தகோரி அன்றைய தினம் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சபாநாயகர் பதவியில் இருந்து தனபாலை நீக்கக்கோரும் தீர்மானத்தை திமுக கொண்டுவந்தது. தீர்மானத்தை எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய, துரை முருகன் வழிமொழிந்தார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேரவையை நடத்தினார். சபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முக்கிய காரணங்களை ஸ்டாலின் விவரித்து பேசினார். திமுகவினர் மீதான தனிநபர் விஷமத்தன பேச்சுகளை அவைகுறிப்பிலிருந்து நீக்கபடவில்லை என்பதையும் குறிப்பிட்டார். காங்கிரஸ் சார்பில் பேரவையில் பேசிய கே.ஆர்.ராமசாமி, சபாநாயகர் தனபால் நடுநிலையாக செயல்படவில்லை என்று குறை கூறினார். தொடர்ந்து திமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
இதனையடுத்து டிவிசன் வாரியாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, எண்ணி கணிக்கும் முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. தீர்மானத்திற்கு 97 எம்எல்ஏக்கள் ஆதரவளித்த நிலையில், 122 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து,எண்ணி கணிக்கும் முறையிலும் தீர்மானம் தோல்வியை தழுவியதாக அறிவிக்கப்பட்டது. தீர்மானம் தோல்வி குறித்து, கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், சபாநாயகரின் பாரபட்ச செயல்பாட்டை மக்களுக்கு தெரியப்படுத்தவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டுவந்ததாக குறிப்பிட்டார்.