திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பகுதிகளில் கட்சி கொடியினை ஏற்றி வைக்கவும், கட்சி தொண்டர்களின் இல்ல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும் வந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழக முதல்வர் டெல்லி பயணம் சென்றுள்ளது ஆக்கப்பூர்வமான சந்திப்பதாக இருக்க வேண்டும் என்றும், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வந்துள்ள தீர்ப்பு முடிவில்லாததாக இருப்பதாகவும், இதுபோன்ற வழக்குகளில் காலகெடுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும், 3-வது நீதிபதி தீர்ப்பு காலம் கடத்தாமல் இருக்க வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் போதிய மழை இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜி.கே.வாசன், 2017 – 2018 ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு நிவாரணத் தொகை முழுமையாக அரசு வழங்கவில்லை என்றும், ஆனால், தனியார் நிறுவனங்களுக்காக அரசு வரிந்து கட்டி கொண்டு செயல்படுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். தமிழக மக்கள் விரும்பாத திட்டத்தை ஆதிக்கம் செலுத்தி திட்டத்தை நிறைவேற்ற நினைத்தால் ஸ்டெர்லைட் ஆலை சம்பவம் போல அமையும் என்றும் அவர் எச்சரிக்கைவிடுத்தார்.
புள்ளம்பாடி பெருவளை வாய்க்கால்கள் நீண்ட காலமாக தூர்வாரப்படவில்லை என்றும், அனைத்து கிராம சாலைகள் மோசமாக உள்ளதால், விபத்து ஏற்படும் சாலையாக மாறி வருவதாகவும் தெரிவித்த ஜி.கே.வாசன், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கைவிடுத்தார்.