தினகரன் – திவாகரன் இடையே ஏற்பட்ட மோதலில், நாங்கள் எக்காரணத்தைக் கொண்டும் திவாகரனை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு இட, அதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் எதிர்வினையாற்ற தினகரன் – திவாகரனுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனை பெறாமல் அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார்.
சசிகலா சிறைக்கு சென்றதற்கே தினகரன்தான் காரணம். அவரின் முதல்வர் ஆசைதான் அனைத்து பிரச்சனைகளையும் கொண்டு வந்தது. தினகரனை ஆதரித்ததற்காக அதிமுகவினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனவும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பேனே தவிர இனி தினகரனை ஆதரிக்க மாட்டேன் எனவும் திவாகரன் தெரிவித்துள்ளார்.
அந்த குற்றச்சாட்டு குறித்து பதில் கூறிய தினகரன் “திவாகரனின் புகார்களுக்கு பதில் கூற விருப்பமில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் எங்களை வெறுத்தாலும் நாங்கள் அவரை நேசிக்கிறோம்” எனக் கூறினார்.
இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் திவாகரனின் அதிமுக ஆதரவு பற்றி கேட்டனர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், இனி எக்காரணத்தைக் கொண்டும் சசிகலா குடும்பத்தினரை(திவாகரன்) அதிமுக வில் சேர்க்க மாட்டோம் என தடாலடியாக பதிலளித்தார்.