பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவுள்ள புதிய பதவி தொடர்பில் அறிந்துகொள்வதற்கு இராஜதந்திரிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களின்போது, இராணுவத்தில் சிறப்புச் செயலணியை உருவாக்கி அதிகாரங்களை ஒப்படைக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தக் கருத்து உள்நாட்டு அரங்கிலும், சர்வதேச அரங்கிலும் பெரும் அதிர்வலையைத் ஏற்படுத்தியிருந்தது. இதன் பின்னரான அமைச்சரவைக் கூட்டத்திலும் இது எதிரொலித்திருந்தது.
இந்தநிலையில், அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு எத்தகைய பதவி வழங்குவதற்கான முனைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது, அது இராணுவம் சார்ந்த பதவியா என்பது தொடர்பில் கொழும்பிலுள்ள தூதரகங்களில் இராஜதந்திரிகள் அறிந்துகொள்வதற்கு முனைப்புக் காட்டியுள்ளனர்.
நல்லாட்சி, ஜனநாயகத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் மஹிந்த அரசு போன்று தற்போதைய அரசும் செயற்படப் போகின்றதா?, சரத் பொன்சேகாவை அவ்வாறான ஒரு பதவிக்கு ஏன் நியமிக்க வேண்டும்? என்று வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைச்சர்களிடமும், அரச நிறுவனங்களிடம் தகவல்களை அறிந்து தமது நாட்டுக்கு அறிக்கை சமர்பிக்கவுள்ளன என்று அறியமுடிகின்றது.