சொகுசு கப்பலில் பயணித்த பிரித்தானியா தம்பதிகளுக்கு கொரோனா வைரஸ்
ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் பயணித்த பிரித்தானியா தம்பதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஜப்பானின் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் கடந்த 48 மணி நேரத்தில் 169 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், பிரித்தானியா தம்பதிகளான டேவிட் ஆபெல் மற்றும் அவரது மனைவி சாலி ஆகியோரும் அடங்குவர். இதன் மூலம் குறித்த கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது.
அவர்கள் இப்போது ஜப்பானில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது, விரைவில் மருத்துவமனைக்கு புறப்படுகிறோம் என ஆபெல் கூறியுள்ளார்.
74 வயதான ஆபெல், கப்பலில் இருந்துக்கொண்டு கொரோனா பாதிப்புகள் குறித்து புது புது தகவல்களை வழங்கி வந்தார். ஆனால் இப்போது தம்பதிகளே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கப்பலில் சிக்கியுள்ள தனது குடிமக்களுக்காக மீண்டும் ஒரு விமானத்தை ஏற்பாடு செய்கிறோம் என பிரித்தானியா அரசாங்கம் இன்று கூறியது, ஆனால் டேவிட் ஆபெல் மற்றும் அவரது மனைவி சாலி அதில் பயணிக்க அனுமதி வழங்கப்படுமா என்பது தெளிவாக இல்லை.
அமெரிக்கா உட்பட பல வெளிநாடுகள் கப்பலிருந்த தனது குடிமக்களை மீட்க விமானங்கள் அனுப்பியதை அடுத்து, பிரித்தானியர்களை மீட்க விமானங்களை அனுப்பும் படி அந்நாட்டு அரசிற்கு ஆபெல் கோரிக்கை விடுத்தார் என்பது நினைவுக்கூரதக்கது.