தமிழ்நாட்டில் கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கிய வடகிழக்கு பருவ மழை தொடக்கத்திலேயே அதிக அளவு மழையை வாரி வழங்கி வருகிறது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இத னால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
கடந்த 8 தினங்களில் சென்னையில் மட்டும் வழக்க மாக இந்த மழை சீசனில் பெய்யும் மொத்த மழை யில் 74 சதவீதம் பெய்து விட்டது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் இரவு சுமார் 6 மணி நேரம் பெய்த இடைவிடாத மழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ளது.
திருவொற்றியூர்- ராஜாஜி நகர், கார்கில் நகர், சத்தியமூர்த்தி நகர். தண்டையார்பேட்டை- வ.உ.சி. நகர். பெரம்பூர்- ஜீவா ரெயில் நிலையம், பெரம்பூர் நெடுஞ்சாலை, பி.பி.சாலை, சீனிவாசன் ஆச்சாரி தெரு, சினிவாச முதலி தெரு, ராமகிருஷ்ணா தெரு, சுப்பிரமணியன் தெரு, பி.எஸ்.என்.எல். குடியிருப்பு. வியாசர்பாடி- ஸ்டீபன் சாலை, சத்தியமூர்த்தி நகர், கல்யாணபுரம்,ஓட்டேரி-குடிசைப் பகுதிகள, கொரட்டூர்-காவியா நகர், பாலாஜி நகர், ஓம்சக்தி நகர், ஆவடி, கொளத்தூர்-ஏரி அருகே 10 நகர் பகுதிகள், முகப்பேர் கிழக்கு, மெரினா கடற்கரை, மயிலாப்பூர்- லஸ் சர்ச் சாலை, விவேகானந்தர் கல்லூரி, பி.எஸ்.சிவசாமி சாலை, சைதாப்பேட்டை- சலவையர் காலனி, செட்டி தோட்டம், நாகரெட்டி தோட்டம், ஆலாட்சியம்மன் நகர், நெருப்பு மேடு, சிட்லபாக்கம் , மடிப்பாக்கம் – ராஜ ராஜேஸ்வரி நகர், லட்சுமி நகர், குபேரன் நகர், ராம்நகர், சதாசிவ நகர், எல்.ஐ.சி. நகர்.
கோவிலம்பாக்கம், நன்மங்கலம், முடிச்சூர், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், ஆதனூர். ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது
வீடுகளுக்குள் புகுந்த மழை தண்ணீரும் வடிந்து விடும் என்று மக்கள் எதிர் பார்த்தனர். ஆனால் நேற்று மாலை 6 மணிக்குப் பிறகு மழை பெய்யத் தொடங்கியதால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் வெளியேறுவதில் இடையூறு ஏற்பட்டது.
நேற்றிரவு மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் அளவு மேலும் உயர்ந்தது. தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரில் உள்ள வீடுகள், திருவொற்றியூர் ராஜாஜி நகரில் உள்ள வீடுகள், மடிப்பாக்கம் ராம்நகர், சதாசிவம் நகர்களில் உள்ள வீடுகள் மிகவும் பரிதாபமான நிலை யில் தண்ணீரில் மிதந்தபடி உள்ளன. இதனால் இந்த பகுதி மக்கள் கடும் அவதியை அனுபவித்து வருகிறார்கள்.
நாராயணபுரம் ஏரியில் இருந்து வெளியேறி வரும் உபரிநீர், மடிப்பாக்கம், தெற்கு ராம்நகரில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளை சூழ்ந்துள்ளது. தற்போது வெளியேறும் தண்ணீர் குறைந்து உள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இன்று காலை சென்னை திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
மழையால் பாதிக்கபட்ட பெருங்குடி கே.பி.கே. நகர் பகுதியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடபட்டு உள்ளது.