மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு நாளைமறுதினம் வடக்குக்குச் செல்லவுள்ளார்.
வடமாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய அனைத்து மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டு அந்த மக்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பில் ஆளுநர் பார்வையிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
6ஆம் திகதி முல்லைத்தீவில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் பேச்சு நடத்தவுள்ளதோடு, முல்லைத்தீவு பிரதேச செயலகத்துக்கும் செல்லவுள்ளார். 7ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஆளுநர் அங்குள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள், மீன்பிடிக் கிராமங்கள், வர்த்தக நிலைய அதிகாரிகள் ஆகியோருடனும் கலந்துரையாடவுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநர் வடக்கில் தங்கியிருந்து பொருளாதார சமூக அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் நேரடியாக பார்வையிடுவது இதுவே முதற்தடவையாகும். அந்தவகையில் வடக்குக்கு ஒதுக்கப்படும் நிதியுதவிகள் முறையாக பயன்படுத்துவதில்லை என விமர்சிக்கப்படுகின்ற நிலையில் வடக்கு மக்களுக்குத் தேவையான விடயங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு எடுத்துக்கூற இது ஒரு சிறந்த களமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.