ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 52 பேர் பலி
ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ச்சியாக வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் பாக்தாத்தை குறி வைத்து பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாக்தாத் நகரின் தெற்கு பகுதியில் மார்க்கெட் பகுதியில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சத்ர் நகரில் நேற்று நடைபெற்ற தற்கொலைப் படை கார் வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கடந்த சில வாரங்களாக பாக்தாத் நகரையொட்டி தாக்குதல்கள் ஏதும் நடைபெறாமல் இருந்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக கடந்த ஜனவரி 2-ம் தேதி சாத்ர் நகரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.