விஜய் நடித்த ‘சர்கார்’ படத்திற்கு அரசியல்வாதிகள் குறிப்பாக அதிமுக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ‘மெர்சல்’ போல் இந்த படமும் அரசியல்வாதிகளால் சூப்பர் ஹிட் ஆகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படம் குறித்து கருத்து கூறிய டிடிவி தினகரன், ‘சர்கார்’ திரைப்படம் மக்களுக்கு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக தயாரிக்கப்பட்டது அல்ல, ஒரு வியாபார நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட திரைப்படம். அந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது நமக்கெல்லாம் தெரியும். அவ்வாறு இருக்கும்போது இலவசங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சி ஒருதலைபட்சமாகத்தான் இருக்கும். அப்படியென்றால் கருணாநிதி ஆட்சியில் கொடுத்த டிவிக்களையும் எரிப்பது போல் காண்பித்திருக்க வேண்டும்.
எனவே வேண்டுமென்றே ஒரு சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்து எதிர்மறை விமர்சனத்தின் மூலம் வியாபாரரீதியாக வெற்றி பெற வைக்க, சர்கார் படக்குழுவினர் விரித்த வலையில் அதிமுக அமைச்சர்கள் விழுந்துள்ளார்கள். எனவே இந்த படத்தை அதிகம்
விமர்சனம் செய்து ஓட வைக்க வேண்டாம் என்பதே எனது கருத்து’ என்று தினகரன் கூறியுள்ளார்.