“மத்திய அரசுடன் சிறந்த உறவினை பேணிவரும் ஐக்கிய நாடுகள் சபை, போரினால் பாதிக்கப்பட்ட எம்முடன் மந்தமான உறவை பேணிவருவது மட்டுமன்றி, பல விடயங்கள் தொடர்பில் எங்களுடன் கலந்துரையாடாமல் நடவடிக்கைகளை மேற்கொள்வது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது” என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஐ.நா. அபிவிருத்தி செயற்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் கனி விக்னராஜாவிற்கும் இடையே முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், “ஐக்கிய நாடுகள் தற்போது எம்முடன் புரிந்துணர்வும், கருத்தொருமித்த தன்மையும் அற்று காணப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டினேன்.
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தவுடன், ஐ.நா. சற்று வேகமாகவும் தீவிரமாகவும் உழைத்திருந்தால் எமது மக்கள் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.
தற்போது மத்திய அரசுடன் சிறந்த உறவினை பேணிவரும் ஐ.நா., போரினால் பாதிக்கப்பட்ட எம்முடன் மந்தமான உறவை பேணிவருவது மட்டுமன்றி, பல விடயங்கள் தொடர்பில் எங்களுடன் கலந்துரையாடாமல் நடவடிக்கைகளை மேற்கொள்வது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் எடுத்துரைத்தேன். அதன்படி, எதிர்காலத்தில் அவ்வாறு நடைபெறாது என கனி விக்னராஜா உறுதியளித்தார்.
மேலும், இன்றைய சந்திப்பானது ஐ.நா.விற்கும் வடக்கிற்கும் இடையே புதிய உறவை ஏற்படுத்த வழிவகுக்கும் என எதிர்பார்க்கின்றோம்” என குறிப்பிட்டார்.