சசிகலா, மத்திய அரசின் பட்ஜெட்டை திடீர் என வரவேற்று அறிக்கை
சசிகலாவின் கணவர் நடராஜன் மத்திய அரசையும்; பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்க, அவரது மனைவியும் அ.தி.மு.க., பொதுச் செயலருமான சசிகலா, மத்திய அரசின் பட்ஜெட்டை திடீர் என வரவேற்று அறிக்கை வெளியிட்டிருப்பது, கட்சியினர் மற்றும் சசிகலா குடும்பத்தினரிடம் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
பகைக்க விரும்பாத சசிகலா:
இது குறித்து, சசிகலா தரப்பினர் கூறியதாவது: பன்னீர்செல்வம் தற்போது தன்னை நிரந்தர முதல்வர் ஆக்கிக் கொள்ளும் முயற்சியில் இறங்கி, மத்திய அரசின் செல்லப் பிள்ளையாகவே மாறி விட்டார். மோடியின் ஆதரவும்; ஆசியும் அவருக்கு நிறைய இருக்கிறது. ஜல்லிக்கட்டு சட்டத்திற்குப் பிறகு, மத்திய அரசுடன் எல்லாவிதங்களிலும் இணக்கமாக இருந்து செயல்படுகிறார் பன்னீர்செல்வம்.
இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கு, அன்னிய செலாவணி மோசடி வழக்கு என பல வழக்குகள், சசிகலாவின் கழுத்துக்கு கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்க, தொடர்ந்து மத்திய அரசைப் பகைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.நல்ல நேரம் வாய்க்கும்போது, முதல்வர் நாற்கலியில் அமர்ந்து கொள்ளலாம் என முடிவெடுத்து, அதற்கேற்ப அரசியல் செய்யத் துவங்கி விட்டார்.
பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவரை தொடர்ச்சியாக முதல்வராக செயல்பட அனுமதிக்கும் மத்திய அரசு மீது கோபமான சசிகலாவின் கணவர் நடராஜன், மத்திய அரசையும் மோடியையும் கடுமையாக விமர்சிக்கிறார்.
பன்னீர்செல்வம் மூலம் தமிழகத்தில், நிழல் அரசை நடத்த பிரதமர் மோடி விரும்புகிறார் என்றெல்லாம் சொல்கிறார். நடராஜனின் இந்த விமர்சனங்களை சசிகலா தரப்பினரே விரும்பவில்லை. அதற்கேற்பத்தான், மத்திய அரசின் பட்ஜெட்டை வரவேற்று, சசிகலா அறிக்கை வெளியிட்டது.
இது கூட நீண்ட யோசனைக்குப் பின் தான், பட்ஜெட் தினமான பிப்., 1ம் தேதி இரவு, பத்தரை மணிக்கு மேல், சசிகலா பெயரில் அறிக்கை வெளியானது. சசிகலாவின் இந்த அணுகு முறையால், நடராஜன் தரப்பினர் அதிர்ச்சி அடைந்திருப்பதோடு, அ.தி.மு.க.,வினர் கடுமையான குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இன்னும் கொஞ்ச நாட்களில், அ.தி.மு.க.,வினர் குழப்பம் தீர்ந்து விடும்.இவ்வாறு அந்த தரப்பினர் கூறினர்.