“ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கான கால எல்லையுடனான தந்திரோபாயத்தை இலங்கை உருவாக்க வேண்டும்.”
– இவ்வாறு பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பிரதி அமைச்சர் ஜொய்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“இலங்கையில் ஆயுத மோதல்களின் பாரம்பரியத்துக்குத் தீர்வைக் காண்பதற்காக இன்னமும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பல உள்ளன.
இலங்கை அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கான கால எல்லையுடனான தந்திரோபாயத்தை உருவாக்க வேண்டும். நல்லிணக்கச் செயலணியின் பரிந்துரைகளைக் கவனத்தில் எடுக்கவேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரனை வழங்கியதை வரவேற்கின்றேன். மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கு வழங்கும் முக்கியத்துவம் குறித்த வலுவான சமிச்சைகளை இலங்கை வெளிப்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.