சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சிறுவன் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, முதலமைச்சரின் இல்லத்தில் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு அந்த சிறுவன் தொடர்பை துண்டித்துள்ளார்.
மீண்டும் அந்த தொலைப்பேசி எண்ணுக்கு காவலர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசவே, அவரது வீட்டிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக அச்சிறுவன் தெரிவித்துள்ளான். இதனை அடுத்து முதலமைச்சர் இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததை அடுத்து, கிடைத்த தகவல் வதந்தி என தெரியவந்தது. பொய்யான மிரட்டல் விடுத்த அச்சிறுவன் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.