தாய்வானில் பிரபல வங்கியொன்றில் கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஒருதொகை இலங்கையிலுள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ள இணைய மோசடி தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.
இந்த மோசடியுடன் தொடர்புட்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், இதனுடன் அரச சார்பற்ற நிறுவனமொன்றும் தொடர்புபட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த அரச சார்பற்ற நிறுவனம் கொள்ளையிடப்பட்ட பணத்தின் ஒருபகுதியை தனது கணக்கில் வைப்பிலிட்டுக் கொண்டுள்ளதாகவும், குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் இனிவரும் நாட்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் எனவும் பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.
தாய்வானில் குறித்த வங்கியில் 600 மில்லியன் டொலர் பணம் இணையத்தின் வழிகொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தப் பணம், பல நாடுகளிலுள்ள வங்கிக் கணக்குகளுக்கு இணையம் மூலம் வைப்பிலிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது தாய்வான் பொலிஸார் உட்பட பல நாடுகளின் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசேட குழுவொன்று இலங்கைக்கும் விரைந்துள்ளது.
தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட 600 மில்லியன் டொலர் பணத்தில் ஒருதொகை இலங்கை வங்கிக் கணக்குகள் சிலவற்றிலும் வைப்பிலிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இந்தக் கணக்குகள், கணக்கு உரிமையாளர்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர் பலரின் வங்கியின் கணக்குகளிலேயே இந்தப் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் மூலம் தெரிவந்துள்ளது.
சர்வதேச நிதி மோசடி வலையமைப்பின் சில செயற்பாடுகள் இலங்கையிலும் முன்னெடுக்கப்படுவதாக இதன்மூலம் அம்பலமாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டுள்ள முனசிங்க என்பவர் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவாலேயே இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
2015இல் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன, முனசிங்கவை தலைவராகக் கொண்ட புதிய ஜனநாயக முன்னணியின் அன்னம் சின்னத்திலேயே பொதுவேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார்.
2009ஆம் ஆண்டு புதிய ஜனநாயக முன்னணியை உருவாக்கிய முனசிங்கவின் அன்னம் சின்னத்திலேயே 2010ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவும் அன்னம் சின்னத்தில் போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.