18.08.2019 முதல் 17.09.2019
மேஷம்: ராசிநாதன் செவ்வாயின் சஞ்சார நிலை இந்த ஆவணி மாதத்தில் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது. ஆயினும் உங்கள் பணிகளை செய்துமுடிக்க மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம். தனது திறமையைக் கொண்டு அடுத்தவர்களை வேலை வாங்கி காரியத்தினை சாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும். வேகமாக நடைபெற்று வந்த காரியங்களில் சிறிது தாமதத்தினை சந்திக்க நேரிடும். ஆயினும் அவ்வகையில் உண்டாகும் தாமதமும் உங்களுக்கு சாதகமான பலனைத் தரும் வகையிலேயே அமையும் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை.
தனாதிபதி சுக்கிரனின் துணையினால் புதிய சொத்து வாங்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும்படியான கருத்துக்கள் அதிகமாக இடம்பிடிக்கும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. செப்டம்பர் 7ம் தேதியில் இருந்து கடன்பிரச்னைகள் தலையெடுக்கக் கூடும். முன்பின் தெரியாத மனிதர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்குவதைத் தவிர்க்கவும். மாணவர்களுக்கும், வேலைவாய்ப்பு தேடி அலைவோருக்கும் கால நேரம் சாதகமாக இருந்து வரும்.
வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்திற்குத் தேவையான புதிய ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக நாட்டம் செல்லும். பிள்ளைகளின் செயல்கள் பெருமை தரும் வகையில் அமையும். ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் பிள்ளைகளின் உடல்நிலையில் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கூட்டுத்தொழிலில் லாபம் கண்டு வருவீர்கள். கலைத்துறையினர் தங்கள் திறமைக்கேற்ற பரிசினை நிச்சயம் பெறுவார்கள். உத்யோகஸ்தர்கள் ஒருவித மந்தத்தன்மையை உணர்ந்து வருவர்கள். திருப்புமுனை ஏதுமில்லாமல் சாதாரண பலன்களைத் தரும் மாதமாக அமையும்.
சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 5, 6.
பரிகாரம் : மாரியம்மன் வழிபாடு நன்மை தரும்.