சட்டமா அதிபர் திணைக்களத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவுள்ளார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றது என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீதி அமைச்சின் கீழேயே இதுவரை காலமும் சட்டமா அதிபர் திணைக்களம் இருந்து வருகிறது.
விஜயதாஸ ராஜபக்ஷ நீதி அமைச்சராக இருந்தபோது, சட்டமா அதிபர் திணைக்களம் சரியாகச் செயற்படவில்லை என்று அரசில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர்.
இந்த நிலையிலேயே, சட்டமா அதிபர் திணைக்களத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்று நம்பப்படுகின்றது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி நிராகரித்திருந்தார்.
நீதி அமைச்சராக தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்கள், துறைகள் பற்றிய வர்த்தமானி அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை.
அந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் போது, சட்டமாஅதிபர் திணைக்களத்தை ஜனாதிபதி தனது நேரடிக் கண்காணிப்பில் கொண்டு வரக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
எனினும், அரசதரப்பு இதனை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.