பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இயங்கி வந்த பொருளாதார முகாமைத்துவ குழுவினால், எந்த பயனும் இல்லை என்பதால், அதனை கலைக்க வேண்டும் என ஜனாதிபதி பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.
பொருளாதார முகாமைத்துவ குழுவை கலைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள ஜனாதிபதி, குழுவின் மூலம் கடந்த காலம் முழுவதும் எடுத்த முடிவுகள் தோல்வியடைந்துள்ளமை குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி முன்வைத்த இந்த பரிந்துரைக்கு அமைச்சர்கள் எவரும் எதிர்ப்பை வெளியிடவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
பிரதமர் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ குழுவில் நிதியமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உட்பட நான்கு பேர் உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர்.
அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட முடிவுகளை எடுக்கும் சிறப்புரிமை இந்த குழுவிற்கு வழங்கப்பட்டது.
எனினும் அந்த சிறப்புரிமையை ஜனாதிபதி தலைமையில் செயற்படும் தேசிய பொருளாதார சபைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.