அமெரிக்க அதிபர் டிரம்பை சுற்றி அடிக்கடி பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழும். அந்த வகையில் அவர் தன்னை காதலித்ததாக முன்னாள் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தி நிறுவனத்திற்கு ஒன்று பேட்டி அளித்த அவர் கடந்த 2006 ம் ஆண்டு டிரம்ப்புடன் உடல் ரீதியான உறவு இருந்ததாக கூறினார்.
டிரம்ப் தன்னுடன் காதலில் இருந்ததாகவும் இருவரும் பலமுறை உறவு வைத்துள்ளதாகவும் அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்தது. எனினும், இது தொடர்பாக பேசுவதை அவர் நிறுத்தவில்லை
அதிபர் தேர்தலுக்கு முன்னதாக டிரம்புடன் உள்ள உறவு குறித்து வெளியில் ஏதும் கூறக்கூடாது, அமைதியாக இருக்க வேண்டும் என ஒருவர் லாஸ் வேகாசில் வைத்து தன்னை மிரட்டியதாக ஸ்டார்மி டேனியல்ஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் பேசக்கூடாது என 1,30,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
நடிகைக்கு பணம் கொடுத்தது டிரம்ப்புக்கு மிக நெருக்கமாக உள்ள அவரது வழக்கறிஞர் மைக்கேல் கோஹென் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என முதன் முறையாக அப்போது டிரம்ப் வாய் திறந்திருந்தார்.
இந்நிலையில், மைக்கேல் கோஹெனின் அலுவலகம் அவர் தங்கியுள்ள ஹோட்டல் அறையில் நேற்று எப்.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். நியூயார்க் கோர்ட் அனுமதியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சோதனைக்கு டிரம்ப் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். “எனது தனிப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு அவகாரமான நிலை. நியாயமற்ற ஒரு புதிய முயற்சியாக இது இருக்கும். உண்மையான அர்த்தத்தில் இருக்கும் நமது நாட்டின் மீதான தாக்குதல் இது. நாமெல்லாம் எதற்கு எதிராக நிற்கிறோமோ அதன் மீதான தாக்குதல்” என டிரம்ப் கூறியுள்ளார்.