ஆம்ஸ்டர்டாம் விமான நிலைய ஓடுபாதையில் 59 பயணிகளுடன் இறங்கிய விமானம் தரையில் மோதியது
பிரிட்டன் நாட்டில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலைய ஓடுபாதையில் 59 பயணிகளுடன் இறங்கிய விமானம் தரையில் மோதிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
பிரிட்டன் நாட்டில் உள்ள ‘ஃபிலைபி’ என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறியரக விமானம் (உள்ளூர் நேரப்படி) இன்று பிற்பகல் 2.10 மணியளவில் எடின்பர்க் நகரில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நகரை நோக்கி புறப்பட்டு சென்றது.
கனடா நாட்டு தயாரிப்பான இந்த விமானம் Bombardier Dash-8 Q400 turboprop வகையை சேர்ந்ததாகும். 78 பயணிகளை சுமந்து செல்லும் ஆற்றல்கொண்ட இந்த விமானத்தில் 59 பேர் பயணித்து கொண்டிருந்தனர்.
ஆம்ஸ்டர்டாம் நகரை விமானம் நெருங்கியபோது, அப்பகுதியில் மணிக்கு சுமார் 100 மைல் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. காற்றின் வேகத்தை சாதுர்யமாக சமாளித்து, விமானத்தை ஸ்ச்சிப்போல் விமான நிலையத்தில் தரையிறக்க முயன்ற விமானி, ஓடுபாதையை நெருங்கியதும் தரையிறங்க உதவும் சக்கரங்களின் பொத்தானை இயக்கினார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தின் வலதுப்புற சக்கரம் முழுமையாக இறங்கவில்லை. இதை அறியாத விமானி தரையிறக்கியபோது பக்கவாட்டு சக்கரங்கள் ஏற்றத்தாழ்வாக இருந்ததால் விமானத்தின் இடதுப்புற வயிற்றுப் பகுதி பலத்த சப்தத்துடன் தரையில் மோதியது.
மோதிய வேகத்தில் விமானம் குலுங்கியதால் உள்ளே இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும், வயிற்றுப்பகுதி தரையில் தேய்ந்தபடி முன்நோக்கி ஓடிக் கொண்டிருந்த விமானத்தின் வேகம் குறைக்கப்பட்டு, ஓடுபாதையின் நடுவில் நிறுத்தப்பட்டது.
விரைந்துவந்த விமான நிலையை பணியாளர்கள் மற்றும் அவசர உதவி குழுவினர், அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் பத்திரமாக கீழே இறக்கி, அங்கிருந்து ஒரு பஸ் மூலம் விமான நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் வீடியோவுடன் செய்தி வெளியிட்டு வருகின்றன.