அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்தரப்புக்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக அனைவரும் ரகசிய இடத்தில் தங்கவைப்பு
எதிர்தரப்புக்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு ரகசிய இடத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் முதல்வராக பொறுப்பேற்க தயாராகி வருகிறார். இதற்கிடையே, சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அளித்த திடீர் பேட்டியால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள் ளது. இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை சசிகலா நேற்று கூட்டியிருந்தார். இதில் பேசிய சசிகலா, ‘‘நம்மைப் பிரிக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை. ஒற்றுமையுடன் இருப்போம்’’ என அறிவுறுத்தினார்.
வழக்கமாக கூட்டம் முடிந்து எம்எல்ஏக்கள் விடுதிக்கோ, தங்கள் வீடுகளுக்கோ செல்வார்கள். ஆனால், நேற்று கூட்டம் முடிந்ததும் எம்எல்ஏக்கள் யாரையும் அதிமுக தலைமை வெளியில் விடவில்லை. அமைச்சர்களை பொறுப்பாளர்களாக போட்டு, அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்படி செய்தனர். அதன்பின், மதிய உணவு முடித்து பிற்பகல் 3.20 மணிக்கு மூன்று சொகுசுப் பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் வேறு ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாமல்லபுரம் அருகே நட்சத்திர விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக ஒரு தரப்பினரும் புதுச்சேரி அழைத்துச் செல்லப்பட்டதாக மற்றொரு தரப்பினரும் தெரிவித்தனர். ஆளுநர் வரும்வரை எதிர்தரப்பினர் கண்ணில் பட்டுவிடாதபடி எம்எல்ஏக்கள் முழு பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கமாக அரசியலில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும். பெரும்பான் மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உறுப்பினர்கள் அணி தாவி விடக்கூடாது என்பதற்காக அவர்களை யாரும் தொடர்பு கொள்ள முடியாத இடத்துக்கு ஆளுங்கட்சியினர் மாற்றுவார்கள். தமிழகத்திலும் இதுபோன்ற சம்பவம் எம்ஜிஆர் மறைவுக்குப் பின் நிகழ்ந்தது.
அதிமுக இரண்டாக பிரிந்தபோது, ஜானகி அணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதாவுக்காக அவர் தலைமையிலான 33 எம்எல்ஏக்கள் வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டு, காவல்துறையின் கண்ணையும் மறைத்து, சட்டப்பேரவைக்கு கொண்டுவரப்பட்டு வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
டெல்லி பயணம் ரத்து
எம்எல்ஏக்கள் அனைவரையும் இன்று டெல்லிக்கு அழைத்துச் சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து, ஆளுநரின் வருகை தள்ளிப்போவது குறித்து முறையிட அதிமுக தலைமை திட்டமிட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்து இன்று பிற்பகல் சென்னை வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்எல்ஏக்களை டெல்லி அழைத்துச் செல்லும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.