போர்த்துக்கேயர் காலம் தொடக்கம் சைவர்களையும் பௌத்தர்களையும் மோத விடும் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறதாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்ச்சியில் கத்தோலிக்கர் காலம் காலமாக இலங்கையில் செயற்பட்டு வந்தனர் என்பதைச் செல்வம் அடைக்கலநாதன் இந்தத் தலைமுறையிலும் எடுத்துக்காட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அறிக்கை ஒன்றின் ஊடாகவே அவர் இதனை கூறியுள்ளார்.
கன்னியா மற்றும் செம்மலை நீராவியடி புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்புகளை அகற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய இரத்தின தேரர் உதவுவாரா என செல்வம் அடைக்கலநாதன் வவுனியாவில் நடந்த கூட்டம் ஒன்றில் கேட்வி எழுப்பியிருந்தார்.
அவர் வவுனியாக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த அதேவேளை நானாட்டான் பிரிவில் அருவி ஆற்றங்கரையில் பாழடைந்த சைவக் கோயிலுக்கு அருகில் சட்டத்தை மீறித் தூண் அமைத்து மரியாளுக்கு உருவச்சிலையை திடீரெனச் சாலையோரத்தில் அவரது ஆதரவாளர்கள் உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருக்கேதீச்சரக் கற்கோயிலை உடைத்து மன்னார்க் கோட்டையையும் ஊர்காவற்துறை கடல் கோட்டையையும் கட்டிய போர்த்துக்கேயர் காலம் தொடக்கம் நேற்று அருவி ஆற்றங் கரையில் மரியாள் சிலையை வைத்த காலம் வரை மன்னார் மாவட்டம் முழுவதையும் கத்தோலிக்க மயமாக்கும் முயற்சியில் செல்வம் அடைக்கலநாதனின் ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருவதை மறைத்து அத்துரலிய இரத்தின தேரர் மீது குறைகூறுவதாகவும் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் திருக்கேதீச்சரம் கோயில் வாயிலில் மாந்தைச் சந்தியில் உலூர்தம்மாள் தேவாலயத்தைக் கட்ட ஆதரவு கொடுத்ததை மறந்து விட்டீர்களா? என்றும், சைவர்களின் மனத்தில் ஆறாப் புண் தந்த இந்த நிகழ்வை நீங்கள் மறைக்க முயல்கிறீர்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதுமட்டும் அல்லாமல் கட்டையடம்பன் அரசுப் பள்ளியில் கத்தோலிக்க அருள் நங்கை முதல்வராக இருந்து கொண்டு சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும் பொட்டும் அணியக்கூடாது பூ வைக்கக்கூடாது என்று அராஜகமாக ஆணையிட்டதை செல்வம் அடைகலநாதன் ஆதரவு கொடுத்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மூன்றாம் பிட்டியில் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்கள் ஆதரவுடன் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மறித்து முள்கம்பி அமைத்தையும், முழுக்க முழுக்கச் சைவர்கள் வாழும் வெள்ளாங்குளம் கிராமத்தில் உங்கள் ஆதரவாளரான தேவன்பிட்டிக் கத்தோலிக்கர் எட்டு அடி உயரச் சிலுவையை நிறுவியதை நீங்கள் மறைக்க முயல்கிறீர்களா? எனவும் மறவன் புலவு கூறியுள்ளார்.
அத்துடன் வண்ணான்குளம் கிராமத்தில் பெரும்பான்மையாகச் சைவர்கள் வாழும் அவ்வூரில் சைவர்கள் செல்லும் கோயில்களுக்கு வழியெங்கும் தடைவிதிக்கும் உங்கள் ஆதரவாளர்களை மறந்தீர்களா? என்றும், சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் கத்தோலிக்கக் கோயில் ஒன்றைப் பாதிரியார் கட்டியதும் அல்லாமல் அங்கு வாழ்கின்ற சைவர்களை மிரட்டுவதற்குக் கத்தோலிக்கர்களை அழைத்துச்சென்ற அப் பாதிரியாரும் கத்தோலிக்கர்களும் உங்கள் ஆதரவாளர்கள் அல்லவா? எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இறைத் தூதர் இயேசுவைக் கடவுள் என்று கூறி உங்கள் அறியாமையின் உச்சத்தைத் தமிழ் மக்கள் சார்பில் உலகத்துக்குக் கூறி தமிழ் மக்களை வெட்கத்துக்கு உள்ளாக்கினார்கள். உங்களுக்கு வாக்களித்த கத்தோலிக்க மக்களுக்கு துரோகம் இழைத்தீர்கள்.
எனினும் வணக்கத்துக்குரிய அத்துரலியே இரத்தின தேரர் வன்னியின் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல வன்னியில் வாழ்கின்ற சைவ மக்களின் வாக்குகளைப் பெற்று வென்றவரும் அல்ல எனவும் சச்சிதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அடைக்கலநாதன் வன்னியில் உள்ள சிறப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள சைவர்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். வெற்றி பெற்றபின் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மன்னார் மாவட்டச் சைவர்களுக்கு நீங்கள் இழைத்து வரும் கொடுமைகளை அடுக்கடுக்காகச் சொல்கிறார்கள்.
என் செய்தோம் என் செய்தோம் என உங்களுக்கு வாக்களித்த தம் தவறை உணர்ந்து தலையில் அடித்து அழுகிறார்கள் எனவும் அவர் குறிப்ப்பிட்டுள்ளார்.
அதன் உச்சமாக, பல்லாயிரம் ஆண்டு பழமையான திருக்கேதீச்சர கோயில் வீதி முகப்பில் வரவேற்பு வளவை உடைத்த பாதிரி கோலத்தில் வந்த மார்க்கசுவுக்கும் குண்டர்களுக்கும் நீங்கள் மறைமுகமாக அளித்த ஆதரவு உங்கள் கட்சியைச் சேர்ந்தவர் பிணையில் எடுத்த சோக நிகழ்வு உங்களுக்கு வாக்களித்த சைவர்களைத் துயரத்தில் மீறாத அழுகையில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறான நிலையில் அத்துரலிய இரத்தின தேரரைச் சுட்டும் உங்கள் விரலுக்காக மடித்து உங்களையே சுட்டும் மற்ற மூன்று விரல்களையும் மறைக்காதீர்கள். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என 1800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய தமிழ் வரிகளை மறக்காதீர்கள் எனவும் மறவன் புலவு குறிப்பிட்டுள்ளார்.
சைவருக்கும் புத்தருக்கும் இடையே தொடர்ந்தும் பிளவை ஏற்படுத்தலாம் குளிர் காயலாம் என்ற உங்களின் பகற் கனவு இனிமேல் ஒரு போதும் பலிக்காது எனவும் மறவன் புலவு சச்சிதானந்தன் அவரது அறிக்கையில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.