கோயம்புத்தூரில் உதவி பேராசிரியை தனது காதலை ஏற்க மறுத்ததால் மருத்துவ கல்லூரி மாணவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், காரிபாளையம் அருகே உள்ள கீழ்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் மகன் நவீன்குமார் (22). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ஆம் ஆண்டு மருத்துவம்(MBBS) படித்து வருகிறார்.
இவர் அந்த கல்லூரியில் பணியாற்றி வரும் உதவி பேராசிரியை ஒருவரிடம் நன்றாக பேசுவார். அவரும் நவீன்குமாரிடம், மாணவர் என்ற முறையில் நன்றாக பேசி வந்துள்ளார். நவீன்குமார் அந்த உதவி பேராசிரியையை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ள நிலையில், உதவி பேராசிரியை வீட்டிற்குச் சென்று ஆசிரியையிடம் நான் உங்களை காதலிக்கிறேன் என்று நவீன் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உதவி பேராசிரியை, எனக்கு உன்மீது அதுபோன்ற எண்ணம் வரவே இல்லை. நான் சகோதர பாசத்துடன்தான் உன்னுடன் பழகினேன், நீ என்னை காதலித்து வந்தால் அதை மறந்துவிட்டு, ஒழுங்காக படிப்பில் கவனம் செலுத்து என்று நவீன்குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து நவீன்குமார் தன் கையில் வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். ரத்தம் வழிந்தோட அவர் கீழே சாய்ந்ததை பார்த்த அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.