இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது
ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அ.தி.மு.க. இரண்டாக உடைந்து சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் 12–ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். இதனால் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது அணியினருடன் டெல்லி சென்று தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியை சந்தித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதை தொடர்ந்து சசிகலா அணியினர் நசீம் ஜைதியை சந்தித்து, பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்தவர்களே இப்போது அவரது நியமனத்தை எதிர்ப்பதாகவும், இரட்டை இலை சின்னம் தொடர்பான ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் 5 மணி நேர தீவிர ஆலோசனைக்குப்பிறகு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடையாது. ஓபிஎஸ்,சசிகலா தரப்பு வாதங்களை கேட்ட பின் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கப்பட்டது. சசிகலா தரப்பும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் அதிமுக பெயரை பயன்படுத்தக்கூடாது. தேர்தல் ஆணையம் அளிக்கும் சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
நாளை காலை 10 மணிக்குள் இரு தரப்பும் தங்களது பெயரை தெரிவிக்க வேண்டும். இரு தரப்புக்கும் நியாயமாக நடந்து கொள்ளவே சின்னம் முடக்கப்பட்டது. 20 ஆயிரம் பக்க ஆவணங்களை பரிசீலித்து உடனே தீர்ப்பு வழங்குவது கடினம். ஓரிரு நாளில் தெளிவான முடிவை எடுக்க இயலவில்லை. நாளை இரு தரப்பினருக்கும் புதிய சின்னம் ஒதுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு 2-வது முறையாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.