5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பதிலாக 7 அல்லது 8ஆம் ஆண்டில் பரீட்சை ஒன்றை நடத்த எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பெறுபேறுகளுக்கமைவாக மாணவர்களின் திறமைகளுக்கேற்ப ஒவ்வொரு பாட பிரிவுகளுக்கும் மாணவர்களை நெறிப்படுத்தும் வகையில் கல்வியியலாளர்களின் வழிகாட்டலில் அந்தப் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.கொடகம சுபாரதி மகா மாத்ய வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று அரசதலைவர் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்வதன் ஊடாக உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் கல்வி முறைகளுக்கு ஏற்றவகையில் எமது நாட்டின் கல்வித்துறையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவோம்.
மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணிதவியலாளர்கள், விவசாய நிபுணர்கள், தொழிநுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட துறைகள் வரை பிள்ளைகள் உயர்கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இதனூடாகக் கிடைக்கும்.
புலமைப்பரிசில் தொடர்பில் கல்வி, விஞ்ஞான ரீதியில் சிக்கல் நிலை காணப்படுகிறது. கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கு வசதியற்ற மிக வறிய குடும்பங்களின் பிள்ளைகள், அரச பாடசாலை உள்ளிட்ட தரப்புக்குக் கொடுப்பனவு வழங்கி, மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்கும் நோக்குடன் ஆரம்பமான புலமைப்பரிசில் பரீட்சை இன்று பிரபல பாடசாலைகளிலும் ஜனரஞ்சகமான பாடசாலைகளில் பிள்ளைகளை அனுமதிப்பதற்கான ஒரேயொரு தடைத்திறனாக மாறியுள்ளது.
கல்வித்துறையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுள் 86 சதவீதத்தினர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய கல்வி முறை யில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் -– என்றார்.