ஹக்கர்களால் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது தனது கணக்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் இன்று டுவிட்டர் பதிவினூடாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த கருணா, புதிய அரசாங்கம் மாற்றப்பட்டதில் இருந்து பல்வேறு கருத்துக்களை கூறிவந்தார்.
குறிப்பாக அவர் சமூக வலைத்தளங்களில் (டுவிட்டர், முகநூல்) தனது கருத்துக்களை பதிவிட்டு வந்தார். அத்தோடு தமிழீழ விடுதலை புலிகள் இரகசியங்கள் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக பல்வேறு விடயங்களையும் அம்பலப்படுத்தி வந்தார்.
ஆனால் கடந்த சில நாட்களாக அவரது கணக்கில் போலியான பதிவுகள் போடப்பட்டு வருவதாக கருணா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
“சிலர் என் கணக்கை ஹேக் செய்துள்ளார்கள். தமிழீழ விடுதலை புலிகளின் இரகசிங்களை வெளியிடுவது புலம்பெயர் தமிழர்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால் தற்போது எனது கணக்கு பாதுகாப்பாக இருக்கின்றது, இலங்கை மக்களுக்கான எனது கடமை தொடரும்” என கூறியுள்ளார்.