ஐக்கிய தேசியக் கட்சியினருக்குப் பக்கச்சார்பாக செயற்படுகின்ற சபாநாயகரை நாம் இனியொரு போதும் சபாநாயகராக அங்கீகரிக்கப் போவதில்லை. ஆகையினாலேயே இன்று அக்கிராசனத்தில் அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே என்று சபாநாயகரை விளித்தேன். இவ்வாறு பக்கச்சார்பாக செயற்படும் சபாநாயகரின் ஊடாக நாட்டின் அரசியல் குழப்பநிலைக்குத் தீர்வுகாண முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கூடிய நிலையில் அமர்வுகளைப் புறக்கணித்து மஹிந்த தரப்பினர் வெளிநடப்புச் செய்திருந்தனர்.
இதையடுத்து அவர்கள் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஏற்பாடுசெய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,பிரதமர் ஒருவரோ அல்லது அரசாங்கம் ஒன்றோ இருப்பதாக தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி வரும் சபாநாயகர், சபை அமர்வுகளின் போது சம்பந்தனை எதிர்கட்சித் தலைவர் என விளித்தார். அரசாங்கம் இல்லாவிடின் எவ்வாறு எதிர்கட்சித் தலைவர் மாத்திரம் இருக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது.
சபாநாயகரின் இச்செயற்பாடு அவரின் திட்டமிட்ட நாடகங்களையே வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையினை இவ்வாறு பக்கச்சார்பாக செயற்படும் சபாநாயகரின் ஊடாகத் தீர்க்க முடியாது. ஆகையினாலேயே நாங்கள் பாராளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்து வெளியேறினோம் என்றார்.