Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழில் தொடரும் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்

யாழில் தொடரும் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்

யாழில் மூன்று இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

யாழ். நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக்குழு , வாகனங்கள் மற்றும் கடைகளை அடித்து உடைத்து அட்டகாசம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாச்சிமார் கோவிலடி, ஓட்டுமடம் மற்றும் தம்பி லேன் ஆகிய இடங்களில் இரவு 8.45 மணி முதல் 9.30க்கு இடைப்பட்ட இடைவெளிகளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாச்சிமார் கோவிலடியில் வீதியால் சென்ற பட்டா ரக வாகனத்தை இடைமறித்த குறித்த கும்பல் வாகன சாரதியை தாக்கியதுடன், வாகனத்தையும் அடித்து நொருக்கி விட்டு தப்பி சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து தம்பிலேனுக்கு சென்ற கும்பல் அங்கிருந்த கடையொன்றினை அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்ததுடன், கடையில் நின்றவர்களையும் அச்சுறுத்தி சென்றுள்ளனர்.

பின்னர் ஓட்டுமடம் பகுதியில் சிறிது நேரம் நின்று, வீதியால் சென்றவர்களை அச்சுறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடங்களுக்கு சென்ற பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டதுடன் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv