பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 42 விசேட அதிரடிப்படையினரும், 28 இராணுவச் சிப்பாய்களும் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஷவைக் கொலை செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதால் அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என பொது எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே, அவரின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று தமிழ் ஊடகம் ஒன்றால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
“கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அது தொடர்பான மேலதிக தகவல்களைத் தற்போது வெளியிடமுடியாது.
கோத்தாபாயவுக்கு 42 விசேட அதிரடிப்படையினரும், 28 இராணுவத்தினரும் ( 5 உயர் அதிகாரிகள்) பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இது போதுமானதாக இருக்கும் என்றே நான் நம்புகின்றேன். இதற்கு மேலும் பாதுகாப்பு வேண்டுமெனில் அவர் அரசிடம் கோரலாம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பொலிஸ்மா அதிபர் குறித்து கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர், “பொலிஸ்மா அதிபரால் அரசுக்குள் குழப்பம் ஏற்படவில்லை. அவர் சிறப்பான அதிகாரி. சிற்சில குறைபாடுகள் இருக்கின்றன. அவைதான் ஊடகங்களில் வெளிவருகின்றன.
அவர் செய்யும் நல்ல விடயங்கள் வெளிவருவதில்லை. 99 நல்ல விடயங்களைச் செய்துவிட்டால் ஒரு தவறு செய்தாலும் அதுதான் வெளிச்சத்துக்கு வரும். எனவே, அந்தத் தவறையும் திருத்திக்கொண்டு பொலிஸ்மா அதிபர் முன்நோக்கி செல்வார் என்று நம்புகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.