இலங்கையின் இனப் பிரச்சினை தொடர்பாக மங்கள முனசிங்க தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக் குழு முன்வைத்த யோசனைகளுக்கு அன்று தமிழ்க் கட்சிகள் இணங்கியிருந்தால் நாடு புதியதொரு வரலாற்றில் பயணித்திருக்கும் என்று கூறியிருக்கிறார் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க.
இடதுசாரிக் கட்சி ஊடாகத் தனது அரசியல் பயணத்தைத் தொடக்கி, சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவராக வளர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இராஜதந்திரியாகவும் இருந்தவருமான மங்கள முனசிங்க தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த அனுதாபத் தீர்மானம் குறித்து உரையாற்றும்போதே ரணில் இதைக் கூறியிருந்தார். இதனடிப்படையில் அரசியல் தீர்வு ஒன்று ஏற்படாததற்கான பழியைத் தமிழர்கள் மீது இலகுவாகச் சுமத்திவிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தில் இருந்தபோது, ரணசிங்க பிரேமதாச அரச தலைவராகப் பதவி வகித்தபோது எதிர்க் கட்சியில் இருந்தவரான மங்கள முனசிங்கவின் தலைமையில் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை அமைத்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்வதுடன் தொடர்புபட்ட தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றை எட்டுவது இந்தக் குழுவுக்குக் கொடுக்கப்பட்ட பணி. எனினும் தமிழர்களின் பிரச்சினையை ஒரு தேசியப் பிரச்சினை என்று கருதாத மங்கள முனசிங்க, தனது குழுவுக்கு இடப்பட்ட கட்டளையில் இருந்து ‘தேசிய’ என்ற வார்த்தையை நாடாளுமன்றத்தின் அனுமதியோடு பின்னர் தூக்கிவிட்டார்.
இந்தத் தெரிவுக் குழுவின் சார்பில் ஓர் இடைக்கால அறிக்கையும் வெளியிடப்பட்டது. எனினும் அது தமிழர்களின் அடிப்படைகள், கோரிக்கைகள், விருப்புகள், வேணவாக்கள் எவற்றையும் கணக்கில் எடுக்கவில்லை. குறிப்பாகப் பண்டா–- செல்வா ஒப்பந்தம், டட்லி–செல்வா ஒப்பந்தம் என்பவற்றின் ஆதார சுருதியைக்கூடக் கொண்டிருக்கவில்லை என்றுகூறித் தமிழ்த் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டிருந்தன.
இனப் பிரச்சினைக்குத் தீர்வாக மங்கள முனசிங்க தலைமையிலான தெரிவுக்குழு முன்வைத்த யோசனைகள் சிங்கள, பௌத்த ஆட்சியையும் அதிகாரத்தையும் இந்த நாட்டில் அழுந்தப் பதிப்பதற்கானதாக இருந்ததே தவிர தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கானதாக இல்லை என்கிற விமர்சனம் அப்போதே ஏற்பட்டது.
மற்றொருபுறத்தில் அப்போது தமிழ் மக்களின் ஆயுத பலமாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் இந்த இடைக்கால அறிக்கையைக் கண்டுகொள்ளாமலேயே தட்டிவிட்டது.
வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட இந்தத் தெரிவுக் குழு அதிகாரப் பகிர்வையன்றி அதிகாரப் பரவலாக்கத்தையொட்டியதான தீர்வு யோசனைகளையே முன்வைத்தது. இதற்கூடாகக் கொழும்பின் பிடியை மாகாணங்களினுள் இன்னும் இறுக்கமாகக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பே உருவாக்கப்பட இருந்தது.
இதனாலேயே அந்தத் திட்டத்தைத் தமிழ் அரசியல் தலைமைகள் நிராகரிக்க வேண்டியதாக இருந்தது. தொன்று தொட்டுத் தமிழர்களின் கோரிக்கை ஒன்றாகவே இருந்து வருகின்றது. தமிழர்கள் தமது தலைவிதியைத் தாமே தீர்மானித்துக்கொள்வதற்கு அவர்களுக்கு இருந்த அதிகாரம் அவர்களிடம் மீளளிக்கப்படவேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை.
ஐரோப்பியர்களின் வருகையோடு இல்லாமலாக்கப்பட்ட அந்த அதிகாரத்தைக் கூட்டாட்சியின் ஊடாகவோ, தனிநாட்டின் ஊடாகவோ பெற்றுக்கொள்வது மட்டுமே தமிழர்களின் நோக்கமாக இருந்து வந்திருக்கிறது. அதற்காகவே அற வழியிலும் ஆயுதப் போராட்டத்தின் ஊடாகவும் தொடர்ந்து போராடியிருக்கிறார்கள், போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அது புரிந்திருந்தும் அதை வழங்காது, தமது சொந்த அரசியல் நலன்களுக்காகச் சிங்கள, பௌத்த மேலாதிக்கவாதத்தைத் தூக்கிப்பிடித்து நிற்கும் சிங்கள ஆளும் வர்க்கமே தீர்வுக்குத் தடையாக இருக்கின்றது. இந்த உண்மையை இலகுவாக மறைத்துவிட்டுத் தமிழர்கள் மீது பழியைப் போட்டிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
தமிழர்கள் தாம் விரும்புவதைப் பெறுவதற்குப் போராடுவதைவிட சிங்களவர்கள் தருவதைப் பெற்றுக்கொண்டு தீர்வுக்கு வந்துவிடவேண்டும் என்கிற கருத்தே அவரது கூற்றில் தொனிக்கிறது. வரவிருக்கும் புதிய அரசமைப்பு விவகாரத்திலும் அவர் அதையே எதிர்பார்க்கிறார் என்பதற்கான கட்டியமாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.