முல்லைத்தீவு – திருமுறிகண்டியை பகுதியில் இளம் குடும்பப் பெண் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கொலையாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் முல்லைத்தீவு – முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் கறுப்பையா நித்தியகலா என்ற 32 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டிருந்தார்.
கிளிநொச்சி – அறிவியல் நகர பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த குறித்த பெண் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பிள்ளையின் தாயான நித்தியகலா கடந்த 28ம் திகதி மாலை 7.15 மணிக்கு கடமையில் இருந்து திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் மறுநாள் 29ம் திகதி பகல் கிளிநொச்சி பன்னங்கண்டிப்பகுதியில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இப் பெண்ணின் கொலைக்கு நீதி கோரி முல்லைத்தீவு திருமுறிகண்டிப்பகுதியில் பொது அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தற்கு முன்பாக குறித்த பேரணி ஆரம்பமாகி வசந்த நகர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தை சென்றடைந்து அங்கு ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபர், முதலமைச்சர் ஆகியோருக்கான மனுக்கள் கையளிக்கப்பட்டன.
இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி சிறிஸ்கந்தராஜா சிவஞானம் சிறீதரன், மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன் ஆ புவனேஸ்வரன், த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.