செஞ்சோலை படுகொலைக்கு நீதி கோரும் முகமாக ஜெர்மன் தலைநகரத்தில் பாராளுமன்றத்துக்கு அருகாமையில் (Brandenburger Tor) க்கு முன்பாக பேர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதில் தாயகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு நிகராக கொல்லப்பட்ட ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் மாதிரி கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்தும் வேற்றின மக்களுக்கு ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை எடுத்துரைக்கும் முகமாக ஆங்கிலத்திலும், ஜெர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் விளக்கமளிக்கப்பட்டது.
2006 ஆகஸ்ட் 14 ஆம் திகதி வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 53 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கான 12ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இலங்கையிலும் பல இடங்களில் நடைபெற்றதுடன், புலம்பெயர் தேசத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத பதிவாகிவிட்ட செஞ்சோலை படுகொலை, தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் குருதியால் எழுதப்பட்டுள்ளது.