மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால், வடக்கில் செயற்படும் குழுக்கள் மற்றும் குற்றவாளிகளை இரண்டு வாரங்களுக்குள் அடக்க முடியும் என முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் நிலைமை குறித்து யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் இதனை கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செயற்படும் குழுக்களை யார் வழிநடத்தி வருகின்றனர் என்பதை எம்மால் கூற முடியாது.
எனினும், இராணுவத்தினர் தொடர்ந்தும் பிரதேசத்தில் இருக்க வேண்டும் என்பதால், இப்படியான குற்றச் செயல்கள் நடப்பதாக பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர்.
இதன் காரணமாவே நாங்கள் பொலிஸ் அதிகாரங்களை கோருகிறோம். மத்திய அரசாங்கத்திடம் இருக்கும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால், வடக்கு மாகாணத்தின் சிறிய வியூகத்திற்குள், பொலிஸ் அதிகாரங்களை சரியான முறையில் அமுல்படுத்தி இரண்டு வாரங்களுக்குள் குற்றச் செயல்களையும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களையும அடக்க முடியும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.