என்னுடைய தேர்தல் தொகுதியான யாழ். சுழிபுரத்தில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கோரமான ஒன்று என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ் – தென்மராட்சி, தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் 30 வருட யுத்தத்தின் பின்னர் நேற்று உப்பு உற்பத்தி நிறுவனத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
சுழிபுரம் ஒரு வறுமையான பகுதி. கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அத்துடன் கஞ்சா மற்றும் கசிப்பு உற்பத்தியில் அப்பகுதி முன்னிலை பெறுகின்றது.
கடல் வழியாக ஆயுதம் வந்தால் அதை பிடிக்கும் படையினர், போதைப்பொருள் கடத்தலை மட்டும் ஏன் இன்னும் கட்டுப்படுத்தவில்லை? இதற்கு கடற்படையினரும் துணை போகின்றனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.
குழந்தையை கொலை செய்பவர்கள் அதிகரித்துள்ளார்கள். ஆனால் அவர்கள் இலகுவாக வெளியில் வருகின்றார்கள்.
இவ்வாறு சிறுவர்களை துஸ்பிரயோகப்படுத்தினால் அவர்களுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்க வேண்டும். அதை விடுத்து அவர்கள் விடுதலையடைவதற்கு முயற்சிகள் எடுக்கக் கூடாது.
இந்த கொலைகளை வைத்துக்கொண்டு அரசியல் இலாபம் தேடுபவர்களும் அதிகரித்து விட்டார்கள். அதை தாம் கண்டிப்பதாகவும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.