அமி பெரா சீக்கியர் மீதான துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு கண்டனம்
அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமி பெரா சீக்கியர் மீதான துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
‘உலகமெங்கும் இருந்து சென்று குடியேறிய மக்களின் நாடு’ என்ற பெருமையைப் பெற்றது அமெரிக்கா. ஆனால் இப்போது அங்கு இனவெறி தாக்குதல் தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த மாதம் 22–ந் தேதி மது விடுதி ஒன்றில், இந்திய என்ஜினீயர் சீனிவாஸ் குச்சிபோட்லா (வயது 32), அமெரிக்க கடற்படை வீரர் ஆதம் புரிண்டனால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது ஒரு இனவெறி தாக்குதல் ஆகும்.
இந்த படுகொலை நடந்த அதேநாளில் ஓடும் ரெயிலில், நியூயார்க்கில் வசித்து வரும் இந்திய வம்சாவளிப்பெண் ஏக்தா தேசாய், இனவெறி தாக்குதலுக்கு ஆளானார். அவருடன் பயணித்த மற்றொரு ஆசிய நாட்டுப்பெண்ணும் இனவெறி தாக்குதலுக்கு உள்ளானார். இந்த நிலையில், கடந்த 2–ந் தேதி நள்ளிரவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் ஹர்னிஷ் பட்டேல் (43) என்ற வர்த்தகர், தனது வீட்டின் முன்புறத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இப்படி தொடர்ந்து இந்தியர்கள் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருவது அங்கு வாழ்கிற இந்திய மக்கள் மனங்களில் சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அங்கு மறுபடியும் ஒரு இனவெறி தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது. இந்த முறை தாக்குதலுக்கு ஆளாகி இருப்பவர், வாஷிங்டன் மாகாணம், கென்ட் நகரத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளி சீக்கியர் தீப் ராய் (39) ஆவார். படுகாயம் அடைந்த தீப் ராய் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அபாய கட்டத்தை தாண்டினார். இந்தியா தரப்பில் இச்சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரங்களில் அமெரிக்க விசாரணை முகமைகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமி பெரா சீக்கியர் மீதான துப்பாக்கி சூடு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் வெறுப்புணர்வு குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்றும் சாடிஉள்ளார். விசாரணையில் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்பிஐயும் இணைந்து உள்ளது.




