ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் அடுத்த வெசாக் போயா தினத்திற்குள் முற்றுப்பெறும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
மஹரகமவில் உள்ள விகாரையில் காலஞ்சென்ற பெல்லன்வில விமலரத்ன தேரரின் நினைவுதான நிகழ்வு நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட பின்னர், சமகால அரசியல் நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த அரசாங்கத்தின் ஆயுள் இன்னும் இரண்டு வருடங்கள் இல்லை. அடுத்த வருடம் நல்லாட்சியின் ஆயுள் நிறைவடைகிறது. 500 நாட்களாகின்றன. இன்னும் இருப்பது சொற்ப நாட்களேயாகும். இன்னும் ஒரு வெசாக் போயா தினமே இருக்கிறது. நாங்கள் பல சேவைகளை செய்திருக்கின்றோம். நாட்டை கட்டியெழுப்பியிருக்கின்றோம். போரை முடிவுறுத்தியதன் விளைவாகவே விகாரைகளுக்கு பக்தர்கள் வர முடிகிறது.
தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் சுதந்திரமாக செயற்படவும், எமக்கு விரோதமாக சரி வாக்களிப்பதற்கும் பலம் கிடைத்திருப்பது விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடித்தமையிலாகும். அப்படியான போரை முடிவுறுத்தி அனைத்து துறைகளையும் அபிவிருத்தி செய்தது எமது அரசாங்கமாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் அளித்த ஆணையை மதித்து, புரிந்து கொள்வதை விடவும் 113 உறுப்பினர்களை ஏற்படுத்தி அரசாங்கத்தை அமைப்பது குறித்து அரசாங்கம் சிந்திக்கக்கூடாது. அதுவே மகாநாயக்க தேரர்களதும் கருத்தாகும்.