புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் காட்சிப் படுத்தப்பட்டிருந்த அரசதலைவரின் படம் பொறிக்கப்பட்ட விளம்பரப் பதாகை இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. சம்பவவம் குறித்து தெரியவருவதாவது:
புதுக்குடியிருப்பு பிரதேசசபை தேர்தலில் மல்லிகைத்தீவு, மந்துவில், சிவநகர் மற்றும் ஆனந்தபுரம் போன்ற கிராமங்களை ஒன்றிணைத்த புனிதவளநகர் 6ஆம் வட்டாராம் தேர்தல் தொகுதியில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக அ.பரமதாஸ் என்பவர் போட்டியிடுகின்றார்.
இவர் தனது தேர்தல் பரப்புரைக்காக கட்சி அலுவலகம் ஒன்றை கடந்த 5ஆம் திகதி மல்லிகைத்தீவு 9ஆம் வட்டாரப்பகுதியில் திறந்துவைத்துள்ளார். கட்சி பரப்புரைக்கூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில் சாலையைப் பார்த்தவாறு அரசதலைவரின் ஆறடி நீளம்கொண்டதும், மூன்று அடி அகலம் கொண்டதுமான கட்டவுட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு இனந்தெரியாத சிலர் அதற்கு தீவைத்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய பொலிஸ் அதிகாரியும் சம்பவ வருகை தந்து பார்வையிட்டு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.