கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் ஒருவருக்கு இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாடு கடத்தப்படுவதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுரேஸ்நாத் இரத்தினபாலன் (வயது –-48) தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அபுதாபி வழியாக கடந்த வியாழக் கிழமை மாலை 3.45 மணியளவில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வந்திறங்கினார்.
குடிவரவு அதிகாரிகளால் அவர்களின் கடவுச்சீட்டுகள் சோதனையிடப்பட்ட போது, சுரேஸ்நாத் இரத்தினபாலனின் பெயர் கறுப்புப்பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டது.
அவரது குடும்பத்தினரை இலங்கைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்ட போது அவர்கள், அவருடனேயே இருக்க முடிவு செய்துள்ளனர்.
திருப்பி அனுப்பப்படுவதற்காக அவர்கள் வானூர்தி நிலைய இடைத்தங்கல் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று வானூர்தி நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, இவர்களை நாடு கடத்தும் உத்தரவை இல்லாமல் செய்து, இலங்கைக்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஸ்நாத் இரத்தினபாலன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் என்றும், முன்னைய அரசால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களில் ஒருவர் என்றும் கூறப்படுகிறது