தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான மக்கள் ஆதரவு சரிந்துவிட்டது என்ற செய்தி பெப்ரவரி 11ஆம் திகதி வருமாக இருந்தால், புதிய அரசமைப்பை நிறைவேற்ற முடியாது போகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் கொடுத்திருந்த ஆணையை மக்கள் மீளவாங்கி விட்டார்கள் என்ற செய்தி வரக்கூடாது.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பருத்தித்துறையில் நேற்று இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி என்ற சொல் பயன்படுத்தப்படாமல் அது இலங்கைக்குப் பொருத்தமற்றது என்று குறிப்பிட்டுவிட்டு, மத்தியிலும் மாகாணங்களிலும் ஆட்சி அதிகாரங்களை உபயோகிக்கின்ற நாடு என்ற வர்ணிப்பு இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது. அதில் சொல்லப்படும் ஒரு குறை ஏக்கிய ராஜ்ஜிய என்று சொல் உபயோகிக்கப்படுகின்றது. ஆனால் அது ஆட்சி முறையைக் குறிக்கிற சொல் அல்ல என்பது தெளிவாகச் சொல்லப்பட்ட இருக்கிறது.
ஏக்கிய ராஜ்ஜிய என்பது பிரிக்கப்பட முடியாத ஒரு நாடு. அதுதான் அதன் வரைவிலக்கணம் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது. சொல்லப்பட்டது மட்டுமல்லாமல் புதிய அரசமைப்புச் சட்ட வரைவில் எழுதப்படவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஏக்கிய ராஜ்ஜிய ஒரு நாடு. அதற்கு நாங்கள் இணங்குகிறோம். ஏன் இணங்குகிறோம்.
சிங்களத்தில் சிங்கள மக்கள் மத்தியிலே சுமந்திரன் சென்று பேச வேண்டும் என்று ஒருவர் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். சென்று பேசுவது அவருக்குத் தெரியாது. பல தடைவகள் நான் சென்று பேசிக்கொண்டிருக்கிறேன். நாட்டைப் பிரிக்க வேண்டாம் அதிகாரங்களைப் பிரித்துக் கொடுங்கள். சிங்கள மக்கள் மத்தியில் இருக்கிற எண்ணம் கூட்டாட்சியைக் கொடுத்தால் நாடு பிரிந்துவிடும். கூட்டாட்சியைக் கொடுத்தால் நாடு பிரியாது. நாடு பிரியாமல் இருக்க நீங்கள் எதையும் எழுதலாம். அதுதான் நிபந்தனை.