நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாண நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மகிந்த அணியான கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவே சபாநாயகரிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் முதல் நாட்டில் கடுமையான நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிதி மூலதன சந்தையும் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து செல்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதால் பெற்றுக்கொண்ட 292 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்னமும் மத்திய வங்கியின் வெளிநாட்டுக் கையிருப்புக்குச் சேரவில்லை.
இதேவேளை, கடன் பெறும் எல்லையை அதிகரிக்க நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தின் ஊடாக அனுமதியைப் பெற்றிருந்தார். ஆனால், அரச வங்கிகளில் கடன் பெறும் எல்லையை 5 ஆயிரம் கோடியாகக் குறைத்ததுடன், பிணைமுறி விநியோகத்தை ஆயிரம் கோடியாகவும் குறைத் துள்ளார்.
இந்தச் செயற்பாடுகளில் பரஸ்பர விரோதத்தன்மை காணப்படுகின்றது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடி தீர்வுகாண நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகரிடம் பந்துல குணவர்தன எடுத்துரைத்துள்ளார்.
2018ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் 11ஆம் திகதி அரசமைப்பு நிர்ணயசபை கூட்டப்பட்டிருந்தது.
அரசமைப்பு நிர்ணய சபையில் உரையாற்ற எந்தவொரு உறுப்பினரும் சமூகமளித்திருக்காததன் காரணமாக எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதிவரை நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பந்துல குணவர்தன மேற்கண்டவாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.