Thursday , October 16 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புதிய ஜனாதிபதி ஆணைக்குழு ஜனவரி மாத முதல் வாரத்தில்

புதிய ஜனாதிபதி ஆணைக்குழு ஜனவரி மாத முதல் வாரத்தில்

மக்களின் உடமைகளுக்கும் அரச சொத்துக்களுக்கும் இழப்பினை ஏற்படுத்திய ஸ்ரீ லங்கன் விமான சேவை, மிஹின் எயார் விமான சேவை என்பவற்றில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று முற்பகல் கடுவெல நகர வாராந்த சந்தைக் கட்டிட வளாகத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரத்திற்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் சந்திப்புகளுள் ஒன்றாக ”வெற்றிபெறும் கடுவெல – போராட்டத்தை ஆரம்பிப்போம்” எனும் தொனிப்பொருளில் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளுக்கெதிராக எந்தவொரு அரசாங்கமும் இதுவரை மேற்கொண்டிராத தீர்மானங்களை மேற்கொண்டதுடன், எதிர்காலத்தில் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒழுக்கமான அரசியல் தலைமுறையையும் தூய்மையான தேசிய அரசியல் இயக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பினை தாம் நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.

சிறந்த நாட்டினைக் கட்டியெழுப்பும் பாதையில் சிறந்த உள்ளூராட்சி நிறுவனக் கட்டமைப்பினுள் ஒழுக்கமும் நற்பண்புகளும் உடைய உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை உருவாக்குவதற்கான தேவை குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சிறந்த மக்கள் சேவையை வழங்கக்கூடிய உள்ளூராட்சி நிறுவனங்கள் ஊழல், மோசடிகளற்ற நிறுவனங்களாகத் தாபிக்கப்படும்போதே எல்லையற்ற நன்மைகளை மக்களுக்கு வழங்கக்கூடியதாக அமையும் என்றும் தெரிவித்தார்.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது, சிறந்த புத்திசாலித்தனமான, நேர்மையான, நாட்டை நேசிக்கும் அரசியல் தலைமுறையைக் கட்டியெழுப்ப எதி்ர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, தூய்மையான அரசியல் இயக்கத்தினை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அமரர் பண்டாரநாயக்கவின் குருதியினால் தூய்மைப்படுத்தப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நோக்கமாகவும் அது அமைய வேண்டுமெனத் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் உள்ளூராட்சி நிறுவனங்களில் மோசமான ஊழல் நிலைமைகள் காணப்பட்டதுடன்   கொலை, துஷ்பிரயோகங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் அரச சொத்துக்களின் முறையற்ற பாவனையுடன், தமது கௌரவம் பற்றிக் கருதாது செயற்பட்டதுடன் இன்று அவற்றின் பிரதிபலன்களை அனுபவிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தல் வெற்றியின் பின்னர் உள்ளூராட்சி நிறுவனங்களில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, ஊழல், மோசடி, களவு சம்பவங்கள், வீண்விரயம் என்பவற்றிற்கு எதிராக மேற்கொள்ளப்படவேண்டிய தீர்மானங்களை கட்சி என்ற வகையிலும் அரசாங்கம் என்ற வகையிலும் சந்தேகமின்றி தான் செயற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv