தாளையடியில் இருந்து கட்டைக்காடு செல்லும் முதன்மை வீதியை சீரமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியில் உள்ள கட்டைக்காடு கிராமத்தையும் தாளையடிக் கிராமத்தையும் இணைக்கம் முதன்மை வீதி மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கட்டைக்காட்டினைச் சேர்ந்த விமலதாஸ் தெரிவித்ததாவது; ‘நான் 12 வயதில் இருக்கும்போது இந்த வீதியில் பள்ளிக்கு நடந்துசென்றேன். அப்போதிலிருந்து இன்றுவரை, சுமார் 40 வருடங்களாக இந்த வீதி சீரமைக்கப்படாது காணப்படுகின்றது.
இது தொடர்பாக அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம். இருப்பினும் இதுவரை யாரும் சீரமைப்பதற்கு முன்வர வில்லை. குறித்த வீதியானது மாகாண சபைக்குரிய வீதி யாகும்.
அவர்களிடம் கடந்த வருடம் கேட்டபோது, இந்த வருடம் சீரமைத்து தருகின்றோம் என்றார்கள் ஆனால் இந்த வருடமும் முடி யப்போகின்றது இன்னம் சீரமைக்கப்பட வில்லை. இதனால் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்றவை பாதிக்கப்படுகின்றது. குறித்த வீதியினை 9 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.’ என்றார்.