இலங்கையின் அண்மைக்கால அழிவுகளுக்கு எமது நாட்டின் காபன் துகள்கள் அதிகரித்த தரம் குறைந்த எரிபொருட்களே காரணமாகும். நிலக்கரி, மசகு எண்ணெய் என்பவற்றின் பாவனையே சூழலை பாதித்துள்ளதாக பாரிய நகர் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
உலகம் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றது. சூழலியல் பிரச்சினை காரணமாக உலகில் பல்வேறு நாடுகளில் அழிவுகள் அதிகரித்து வருகின்றது. இலங்கையிலும் அண்மைக் காலமாக பாரிய அனர்த்தங்கள், அழிவுகள் ஏற்பட்டு வருகின்றது நாம் அறிவோம். நாட்டின் ஒருபுறம் நீண்டகால வறட்சி, மறுபுறம் வெள்ளப்பெருக்கு, கடல் மட்ட நீர் அதிகரிப்பு, சூறாவளி, அதிகரித்த மழை, கனமான காற்று என்று பாரிய நெருக்கடிகளுக்கு நாம் முகங்கொடுத்து வருகின்றோம். இதற்கு பூலோக உஷ்ண உயர்வே காரணமாகும். மக்களின் செயற்பாடுகளே இதற்கு பிரதான காரணமாகும். இதை நாம் யாரும் ஏற்றுகொள்ள மறுக்கின்றோம். ஆனால் உண்மை இதுதான். இதன் காரணமாக இயற்கை அழிந்து வருகின்றது.
ஆகவே இதற்கான மாற்று வழியினை நாம் தெரிவு செய்யாவிடின் நிலைமைகள் மேலும் பாரதூரமானதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.