சிறுமியை மிருகத்தனமாகக் கொலை செய்த சுவிஸ் குமாரை விடுவித்த குற்றச்சாட் டில் பொலிஸ் அதிகாரியை சிறையில் அடைத்துள்ளீர்கள்.
அந்தப் பொலிஸ் அதிகாரிக்கு, சுவிஸ்குமாரை விடுவிக்கச் சொல்லி உத்தரவிட்ட இராஜாங்க அமைச்சர் சபையில் இப்போதும் இருக்கின்றார். இவ்வாறு மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்த நாட்டில் நீதித்துறைக்கு நிதி ஒதுக்கப்படுகின்றது. ஆனால் வடக்குக்கு ஒரு நீதி, தெற்குக்கு ஒரு நீதி என்ற அடிப்படையிலேயே அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
நீதிமன்ற உத்தரவை மீறிப் போராட்டம் செய்தார்கள் என்று தெற்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூடக் கைது செய்கின்றார்கள். ஆனால் வடக்கில் நீதிமன்ற உத்தரவை மீறிப் போராட்டம் நடத்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வடக்கில் சிறுமியை குருதி சிந்த மிருகத்தனமாகக் கொலை செய்த சுவிஸ்குமாரை விடுவித்த குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரியைக் கைது செய்துள்ளீர்கள்.
அந்தப் பொலிஸ் அதிகாரியை அவ்வாறு செய்யச் சொல்லி உத்தரவிட்ட இராஜாங்க அமைச்சர் இந்தச் சபையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்.
அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏன் இந்த பாரபட்சம்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.