வடகொரியாவை அச்சுறுத்தி மிரட்டுகிற வகையில் அமெரிக்கா நேற்று முன்தினம் ஒரு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. ஒலியை விட வேகமாக செல்கிற சூப்பர்சோனிக் வகையை சேர்ந்த பி–18 லேன்சர் போர் விமானங்களை தென் கொரியாமீது அமெரிக்கா பறக்கவிட்டது. குவாம் தீவில் உள்ள ஆன்டர்சன் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற 2 பி–18 லேன்சர் போர் விமானங்களுடன், ஜப்பானின் போர் விமானங்களும் சேர்ந்துகொண்டன.
இதுகுறித்து அமெரிக்க விமானப்படை செய்தி தொடர்பாளர் கேப்டன் கேண்டிஸ் டில்லிட்டே கருத்து தெரிவிக்கையில், ‘‘அந்தப் பிராந்தியத்தில் போர் விமானங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய எந்த நிகழ்வுக்கும் பதிலடி தருகிற விதத்தில் இது மேற்கொள்ளப்படவில்லை’’ என்று கூறினார்.
ஆனால் இது தொடர்பாக அமெரிக்கா மீது வடகொரியா ஆவேச குற்றச்சாட்டு கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:–
தாதாக்கள் போன்ற அமெரிக்கா ஏகாதிபத்தியவாதிகள் தொடர்ந்து தங்களது வெளிப்படையான அணு ஆயுத அச்சுறுத்தல்களை விடுக்கின்றனர். வடகொரியாவை திணறடிக்க வேண்டும் என்பதற்காக இப்படி மிரட்டல் விடுக்கிறார்கள். வியாழக்கிழமையன்று, ஆன்டர்சன் விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பி–18 அணுசக்தி போர் விமானங்களை தென்கொரியா மீது பறக்க விட்டுள்ளனர். வடகொரியாவை குறிவைத்து அணு ஆயுத தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகை இது.