பிரதமர் மோடி குறித்து முகநூலில் அவதூறாக விமர்சித்ததாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் விஜய் ரசிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர், தமது முகநூல் பக்கத்தில், பிரதமர் மோடி குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை பாரதிய ஜனதா கட்சியினர் எச்சரித்தும், அவர் பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியினர் அளித்த புகாரின் பேரில், திருமுருகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், அவர் விஜய் ரசிகர் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திருமுருகன், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் திரைக்கு வந்த மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி குறித்து சர்ச்சைக்குரிய விமர்சனம் இருந்ததாக பாஜகவினர் குற்றச்சாட்டு எழுப்பியது குறிப்பிடத்தக்கது.