முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள வெடுக்குநாரி பொது மயானத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர் எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்தப் பொதுமயானத்தை மீளக் கையளிக்கப் படையினர் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர் என்றும், அந்தப் பகுதியில் புத்தரின் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஒட்டுசுட்டான் கிராமவாசிகளும், முத்தயன்கட்டு கிராமவாசிகளும் வெடுக்குநாரி சுடலையைக் காலம் காலமாகப் பயன்படுத்தி வந்த நிலையில் 2009ஆம் ஆண்டு படையினர் ஆக்கிரமித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், மீள்குடியேற்றத்தின் பின்னர் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு மாற்று இடம் தேடிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தச் சுடலையை மீட்டுத்தருவதில் அரசியல் தலைவர்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அதிக கவனம் எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.