“பிரிக்க முடியாத – பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அனைத்து மக்களின் உரிமைகளை சக்திமயப்படுத்தும் பின்புலத்தில் உருவாகும் புதிய அரசமைப்புக்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்தும் உறுப்பினர்களும் ஆதரவு வழங்க வேண்டும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கையில் நாடாளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவையொட்டி நேற்று நடைபெற்ற விசேட நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசு என்ற அடிப்படையில் நாம் எதிர்பார்க்கின்ற புதிய அரசைமைப்பின் மூலம் பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அனைத்து மக்களினதும் உரிமைகளை சக்திமயப்படுத்தவேண்டும்.
நாட்டு மக்களின் உரிமைகளை அடிப்படையாகக்கொண்ட பின்புலத்தில் உருவாகும் இந்த அரசமைப்பின் மூலம் நாடாளுமன்றம் மேலும் சக்திமயப்படும்.
நாடாளுமன்றத்தை சக்திமயப்படுத்தும் அந்த இலக்கை அடைந்துகொள்ள நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் அங்கீகாரம் அளிப்பார்கள் என்று நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம்.
70 வருட நாடாளுமன்ற வரலாற்றை நாம் பேசும்போது எதிர்காலம் தொடர்பிலும் சிந்திக்கவேண்டியுள்ளது. சார்க் வலையமைப்பிலுள்ள அனைத்து நாடுகளுடனும், ஏனைய உறவு நாடுகளுடனும் ஒற்றுமையை வலுப்படுத்திக்கொள்வது கட்டாயமானது.
சார்க் நாடுகளுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக, பொருளாதார உறவுகளைப் பலப்படுத்திக்கொள்வதுடன், சார்க் வலையமைப்பு நாடுகளுடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஜனநாயக ரீதியில் சிறந்த சமூகமாகக் கட்டியெழுப்புவதை சர்வதேசத்திற்கு உணர்த்தவேண்டும்.
ஜனநாயக ரீதியில் எமது நாட்டை ஆட்சி செய்த முன்னைய தலைவர்கள் மூலம் பல அனுபவங்களைப் பெற்றுக்கொண்டுள்ளோம்.
ஒருமைப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள ஜனநாயகம், மக்களின் உரிமை, பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை அடைந்துகொள்ளும் எதிர்காலத்தை உருவாக்குவது எம் அனைவரினதும் பிரதான பொறுப்பாகும்.
அரசமைப்பு, நீதித்துறை, நிறைவேற்றுமுறையில் பிரச்சினையில்லாத சமூகத்தைக் கட்டியெழுப்ப நாடாளுமன்றத்திற்கு மக்களால் வழங்கப்பட்டுள்ள இறைமையை எவருக்கும் சவால் விடும் வகையில் கொண்டுநடத்துவது இந்த அதியுச்ச அதிகாரம்கொண்ட நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும்.
நிறைவேற்று அதிகார முறைமையின் கீழ் செயற்படும்போது ஜனநாயகம், மக்கள் ஆட்சியை நிலைநாட்டுவதுடன், நீதித்துறையின் சுயாதீக்கத்தைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொள்ளவேண்டும்.
70 வருட வரலாற்றுடைய இந்த நாடாளுமன்றமானது பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்வாங்கப்பட்டது. அந்தவகையில், 72ஆவது அரசமைப்பின் ஊடாக சில மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டதோடு, 78ஆவது அரசமைப்பால் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டும் நாடா ளுமன்றமானது பலவீனப்படுத்தப்பட்டது.
பின்னர், 18ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் மேலும் பலப்படுத்தப்பட்டதுடன், நாடாளுமன்றமானது முற்றுமுழுதாக பலமற்ற ஒன்றாகவே கடந்த காலங்களில் காணப்பட்டது.
இவ்வாறான நிலையில்தான் நாட்டு மக்கள் 2015ஆம் ஆண்டில் அரசியல் புரட்சியொன்றை ஏற்படுத்தி, 19ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர எமக்கு வழியமைத்துக் கொடுத்தார்கள். இதனால், 18ஆவது திருத்தச் சட்டம் ஒழிக்கப்பட்டதுடன், நாடாளுமன்றமும் பலமாக்கப்பட்டது.
நிறைவேற்று, நீதி, சட்டவாக்கம் ஆகிய மூன்று துறைகளையும் வலுப்படுத்தி மக்களுக்கான ஜனநாயகத்தை முழுமையாக வழங்குவதுமே எமது பிரதான நோக்கமாக இருக்கின்றது” – என்றார்.