வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களில் நிரந்தர நியமனம் வழங்க தெரிவாகிய 182 பேரின் பெயர்ப் பட்டியல் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு கிடைத்தது.
வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களிலும் தற்போது தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கும் நோக்கில் மத்திய கல்வி அமைச்சால் நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்டது. நேர்முகத் தேர்வில் ஆயிரத்து 44பேர் பங்கு கொண்டிருந்தனர்.
அவர்களில் பலர் நேர்முகத் தேர்வில் கோரப்பட்ட தகமைகளை நிறைவு செய்யவில்லை. சிலர் கோரிய சேவைக் காலப்பகுதியை நிறைவு செய்யவில்லை. மேலும் பலர் கோரப்பட்ட தகமைகள் மற்றும் சேவைக் காலம் இருந்தபோதும் சம்பவத் திரட்டுப் புத்தகப் பிரதியை முன்வைக்கவில்லை. இவ்வாறான பிரச்சினைகளால் அவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க முடியாத நிலமையே காணப்படுவதாக மத்திய கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
இந்தநிலையில் இவை அனைத்தையும் நிறைவு செய்த 182 தொண்டர் ஆசிரியர்களுக்கு மட்டும் ஆசிரியர் நியமனத்துக்கான அனுமதி தற்போது வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு நேற்று அனுப்பிவைக்கக்பட்டுள்ளது.